கார் தீ வைப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் கார் தீவைப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் கார் தீவைப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2 கார்களுக்கு தீவைப்பு
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. ஆதரவாளரான அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் மனோஜ்குமாரின் 2 கார்களுக்கு கடந்த 23-ந்தேதி இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக முதல் கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
அவரிடம் நடத்திய தொடர் விசாரணைக்குபின்னர் சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடி பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (28), சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த செய்யது இப்ராஹிம்சா (27), கான்சாகிப் தெருவை சேர்ந்த முகம்மது மன்சூர் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதில் முகம்மது மன்சூர், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் சிவகங்கை மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திட்டம் தீட்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் லெட்சுமிபுரம் தென்கரை பகுதியை சேர்ந்த முகம்மது அன்சாரி (26) என்பவரையும் கைது செய்தனர். இவருக்கு மேற்கண்ட தீவைப்பு சம்பவ திட்டமிடலின்போது முக்கிய பங்கு இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரத்தில் கோழிக்கடைநடத்தி வரும் இவர் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர், ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.