விதிகள் மீறி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து விதிகள் மீறி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து விதிகள் மீறி பட்டாசு தயாரித்த ௫ பேர் கைது செய்யப்பட்டனர்.
2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 29), நாகராஜ் (17) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் எம்.மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த வீரபாகு அனுமதியின்றி தனது குழாய் கடையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். ராஜகோபால் என்பவர் தனது குழாய் கடையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது
திருத்தங்கல் போலீசார் கே.கே.நகரில் நடத்திய சோதனையில் முனியம்மமள் (வயது 48) தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் திரிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். இதே பகுதியை சேர்ந்த பவுன்தாய் (35) தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அதில் பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பவுன்தாயை கைது செய்தனர்.
எஸ்.என்.புரம் திருப்பதி நகரில் கருப்பசாமி (29) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளையும், திரிகளையும் பதுக்கியதாக கைது செய்யப்பட்டார். பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (33) அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
உரிய நடவடிக்கை
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் மீனம்பட்டி-நாரணாபுரம் ரோட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் பலதரப்பட்ட பட்டாசுகளை கோவையை சேர்ந்த நாகராஜ் (39) பதுக்கி விற்பனை செய்ததாக அவரை கைது செய்தனர்.
சிவகாசி பகுதியில் பல இடங்களில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் கட்டிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.