போலி சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்த சித்த வைத்தியர் கைது
தஞ்சையில், போலி சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில், போலி சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்தனர்.
பாரம்பரிய சித்த வைத்தியம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 42). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன் (12) நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தான். இதற்காக நான் எனது மகனை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய சித்த வைத்தியம் கிளினிக் நடத்தி வந்த ரெட்டிபாளையம் சாலை விவேகானந்தர் நகரை சேர்ந்த கார்த்திக் (51) என்பவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றேன்.
போலி சான்றிதழ்கள்
பல முறை அழைத்து சென்றும் எனது மகனுக்கு கால்கள் சரியாகவில்லை. இதுகுறித்து கேட்டபோது சித்த வைத்தியர் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவருடைய சான்றிதழ் குறித்து ஆய்வு செய்தனர். விசாரணையில் கார்த்திக் போலி சான்றிதழ்கள் பெற்று சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.