பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:
பிளஸ்-2 மாணவி கடத்தல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெறறோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள், மாணவியை சிபி கடத்தி சென்று விட்டதாக காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடிவந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மாணவியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில் சிபி மீது ேபாக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்தார். மேலும் சிபியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.