விவசாயியை உருட்டு கட்டையால் தாக்கிய தம்பதி கைது
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 42). விவசாயி. இவருக்கும், சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (30) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருப்பதி மற்றும் இவருடைய மனைவி புவனேஸ்வரி (29) ஆகியோர் தர்மனை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தர்மன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதி மற்றும் புவனேஸ்வரியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயியை உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவத்தில் தம்பதி கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.