ஓசூரில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஓசூர்:
ஓசூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-1 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சானமாவு பகுதியை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய மகன் முருகேஷ் (வயது 20). இவருக்கும், ஓசூரில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் 15 வயதான மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பாலியல் பலாத்காரம்
விசாரணையில் மாணவியை வாலிபர் முருகேஷ் கடத்தி சென்றது தெரிந்தது. அவரை மாணவியுடன் நேற்று முன்தினம் மாலை ஓசூரில் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கடந்த மாதம் 30-ந் தேதி மாணவியை அவர் திருமணம் செய்ததுடன், பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் முருகேசை கைது செய்தனர். மேலும் மாணவியை ஓசூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பிளஸ்-1 மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.