சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
x

சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 30). ரவுடியான இவர் கடந்த மாதம் நாமமலை சீனிவாச பெருமாள் கோவில் விழாக்குழு தலைவரான பாரதிராஜா என்பவரை தாக்கி கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததும், கடந்த 2015, 2017, 2018-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்தும் தெரியவந்தது.

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). இவர் சேலம் சண்முகா நகரை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் என்பவரிடம் நிலமோசடி செய்தார். இதுதொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். விசாரணையில் பிரபல ரவுடியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.


Next Story