3 நாட்கள் அதிரடி சோதனையில் ரவுடிகள் உள்பட 500 பேர் கைது-தனிப்படை போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில், கஞ்சா, சாராயம், புகையிலை விற்றவர்கள் மற்றும் ரவுடிகள் உள்பட 500 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு சோதனை
சேலம் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், சாராயம் விற்பனையை தடுக்கவும், மண், மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பிறப்பித்தார்.
இந்த தனிப்படையினர் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் தீவிர சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது பல்வேறு கடைகளுக்கு சென்று அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
மேலும் கஞ்சா, சாராயம் மற்றும் கள்ளத்தனமாக மதுவிற்கப்படுகிறதா? எனவும் மண், மணல் கடத்தி செல்லப்படுகிறதா? எனவும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
500 பேர் கைது
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக நடந்த சிறப்பு சோதனையின் போது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,500 லிட்டர் சாராயம், 3 ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்களை உதவி கலெக்டர்கள் முன்பு ஆஜர்படுத்தி உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. போதை ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் விதமாக இந்த சோதனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.