பொன்னம்மாபேட்டையில் மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
பொன்னம்மாபேட்டையில் மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பொன்னுத்தாயி (வயது 95). இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். பொன்னுத்தாயி தனது 6-வது மகன் ஆனந்தனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆனந்தன் மற்றும் அவரது மனைவி பரிமளா ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (47) என்பவர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பொன்னுத்தாயை தாக்கி, அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் பொன்னுத்தாயி மூக்குத்தியை பறித்து சென்ற மணிகண்டனை விரட்டி பிடித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.