தர்மபுரி அருகே விவசாயி கொலை: மேலும் 2 பேர் கைது


தர்மபுரி அருகே விவசாயி கொலை: மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே விவசாயி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கொலை

தர்மபுரி அருகே உள்ள புலிகரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 55). இவருடைய மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு பிரேம்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கிருஷ்ணனின் 2 மகன்களே அவரை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணனின் மகன்களான பிரேம்குமார், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணனின் உறவினர்களான மாதையன் (42), முருகன் (40) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தர்மபுரி அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாதையன், முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story