கோட்டப்பட்டியில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கும்பலை சேர்ந்த 15 பேர் கைது-ரூ.5¾ லட்சம், 2 கார், 21 செல்போன்கள் பறிமுதல்


தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

கோட்டப்பட்டி பகுதியில் நள்ளிரவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5¾ லட்சம், 2 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 21 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூதாட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியில் பலர் குழுவாக சேர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கோட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டப்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. போலீசாரை பார்த்தவுடன் அங்கு சூதாடியவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

15 பேர் கைது

அப்போது நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், முன்கூட்டியே திட்டமிட்டு அந்த பகுதியில் கூடி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக 22 பேர் மீது கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் கணேசன் (வயது 45), தனபால் (49), பழனிசாமி (52), செல்வம் (52), கருணாகரன் (53), சிலம்பரசன் (28), மகர மூர்த்தி (51), குமார் (57), அஜித் (26), பெரியசாமி (46), கலையரசன் (32), சர்க்கரை (57), வினோத்குமார் (33), ராஜா (65), ராஜா முகமது (42) ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் சூதாடுவதற்கு பயன்படுத்திய ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்து 345 அங்கு சிக்கியது. இந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் பயன்படுத்திய 2 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், 21 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7 பேர் தலைமறைவு

போலீசாரின் அதிரடி சோதனையின் போது சூதாட்டம் நடந்த பகுதியிலிருந்து தப்பி ஓடி தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூடி பணம் வைத்து சூதாடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சூதாட்ட சம்பவங்கள் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நடக்கின்றன என்பதை கண்டறிய போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story