தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது-போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
நகை, பணம் பறிப்பு
சேலம் செவ்வாய்பேட்டை சந்தைபேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி லீ பஜார் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்த பக்ருதீன் (வயது 47), அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த சதாம் உசேன் (32) ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மதிவாணனிடம் இருந்து 4 பவுன் நகை, ரூ.5,500 ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்ருதீன், சதாம் உசேன் ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது சூரமங்கலம், இரும்பாலை ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி படையப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (24) என்பவர் மகேந்திரனை மிரட்டி ரூ.2,500 பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ஏற்கனவே அவர் மீது அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பக்ருதீன், சதாம் உசேன், கிருஷ்ணகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து பக்ருதீன், சதாம் உசேன், கிருஷ்ணகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.