தங்கத்துக்கு பதில் செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி: கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது-¾ கிலோ தங்க நகைகள் மீட்பு
தங்கத்துக்கு பதில் செம்பு கட்டிகள் கொடுத்து மோசடி செய்த வழக்கு தொடர்பாக கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ¾ கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
தங்க நகைகள்
மேற்கு வங்காள மாநிலம் ஜாசர் ஹூக்்ளி பகுதியை சேர்ந்தவர் ஜுல்விர்கான் (வயது 40). இவருடைய மனைவி பில்கிஸ்தாரா (38). கணவன், மனைவி இருவரும் சேலம் செவ்வாய்பேட்டை மாதவராயன் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தினர்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ் (40) உள்பட 3 பேர் ஒரு கிலோ தங்க நகைகளுக்கு பதில் தங்க கட்டிகள் வேண்டும் என்று அவரிடம் கூறினர்.
நகைகளை பெற்றுக்கொண்ட அவர், ஒரு பையை அவர்களிடம் கொடுத்தார். அதை பரிசோதனை செய்த போது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு கட்டிகள் இருப்பதாக அவர்கள் ஜுல்விர்கானிடம் கூறினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
3 பேர் கைது
இந்த நிலையில் ஜூல்விர்கான் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட தங்க நகைகளை மீட்டுத்தரும்படி, ஷேண்டோ வர்கீஸ் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கணவன், மனைவி மற்றும் அவரது நண்பரான கோவையை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் 3 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த ஜுல்விர்கான், அவருடைய மனைவி பில்கிஸ்தாரா மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ¾ கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.