சேலம் சரகத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 565 பேர் கைது


சேலம் சரகத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 565 பேர் கைது
x

சேலம் சரகத்தில் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்திய 565 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ரேஷன் அரிசி கடத்தல்

சேலம் சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தொடர்ந்து வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்துபவர்களை கைது செய்கின்றனர்.

இந்த நடவடிக்கைகள் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த ஆண்டு மட்டும் சேலம், நாமக்கல்லில் 225 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 282 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகனங்கள் பறிமுதல்

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய சோதனையில் 505 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 283 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சேலம் சரகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரேஷன் அரிசி கடத்திய மொத்தம் 565 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, மினி லாரி, வேன் உள்ளிட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story