மாடுகளை திருடி சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது
மாடுகளை திருடி சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் வெளியூருக்கு சென்று இருந்தார். அவருக்கு சொந்தமான மாடு வீட்டில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கட்டியிருந்த மாடுகளை சிலர் திருடி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் சென்று திருடு போன தங்கள் மாடு உள்ளதா என்று பார்த்தனர். அப்போது அவரது மாட்டை 4 பேர் ஒரு லாரியில் கொண்டு வந்து இறக்கி விற்க முயன்றனர். இதைதொடர்ந்து மாட்டை தேடிப் போனவர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மருது பாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சிவகங்கை மருதுபாண்டியர் குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியராஜ்(வயது 35), மீனாட்சி நகரைச் சேர்ந்த விஜய்(31), பகவத்சிங் தெருவை சேர்ந்த கார்த்திக்ராஜா(53), ரஞ்சித் குமார்(37) என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் 4 பேரும் சேர்ந்து முனியசாமியின் மாட்டை திருடி திருப்புவனத்தில் உள்ள மாட்டுச்சந்தையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.