578 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் இருந்து சிங்கினிபட்டி செல்லும் வழியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் புதுச்சேரி மாநில மதுபானபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரையில் உள்ள மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெளிமாநில மதுபான பாட்டில்கள் 578 இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டில் வசித்த மதகுபட்டியை அடுத்த சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் (வயது 35) என்பவரை கைது செய்து அவர் மீது சிவகங்கை மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அந்த வீட்டை 6 மாதமாக வாடகைக்கு பிடித்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.