பனியன் வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருப்பூரில் கீழே விழுந்த செல்போனை திருப்பிக்கொடுக்காததால், பனியன் வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த சிறுவன் உள்பட 4 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் கீழே விழுந்த செல்போனை திருப்பிக்கொடுக்காததால், பனியன் வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த சிறுவன் உள்பட 4 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் வியாபாரி
திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 47). இவர் செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு ராயபுரம் குமரப்பபுரம் பகுதியில் மொபட்டில் சென்றபோது தலையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து ஹக்கீமை சரமாரியாக தாக்கியதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். உடனடியாக ஹக்கீம் விபத்தில் கீழே விழுந்து கிடப்பதாக செல்போன் மூலமாக தகவல் தெரிவித்த எண்ணை சேகரித்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கீழே விழுந்த செல்போன்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்த நவீன்குமார் (23), ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த அஜித் என்கிற முஸ்தபா (27), சூசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் சம்பவத்தன்று இரவு மரக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு குமரப்பபுரம் வந்துள்ளனர்.
அவ்வாறு செல்போன் பறிக்கும்போது நவீன்குமாரின் செல்போன் கீழே விழுந்துவிட்டது. அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது அந்த வழியாக வந்த ஹக்கீம் செல்போனை எடுத்து பேசியுள்ளார். தனது செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஹக்கீம் மொபட்டில் குமரப்பபுரத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து செல்போனை திருப்பிக் கேட்க, பணம் கொடுத்தால் கொடுப்பதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதற்கு 4 பேரும் மறுத்ததுடன் அவரை தாக்கியுள்ளனர். ஹக்கீமும் எதிர்த்து தாக்கியுள்ளார்.
சிறுவன் உள்பட 4 பேர் கைது
ஒருகட்டத்தில் 4 பேரும் சேர்ந்து கல்லால் ஹக்கீமின் தலையில் தாக்கியதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்தும் 4 பேரில் ஒருவர் 108 ஆம்புலன்சுக்கு அழைத்து தகவல் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. ஹக்கீம் சிகிச்சை பலனின்றி இறந்ததால் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு விசாரித்தனர். அதன்பிறகு விவரம் தெரியவர கொலை வழக்குப்பதிவு செய்து கண்ணனை முதலில் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் நவீன்குமார், முஸ்தபா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பனியன் வியாபாரியை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.