சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தல்; வாலிபர் கைது
சேலம் வழியாக ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா கடத்தல்
வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் மீனா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலிமர்- நாகர்கோவில் செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி முன்பதிவு பெட்டியில் சோதனை செய்தனர்.
வாலிபர் கைது
அப்போது அங்கு சந்தேகத்தின்பேரில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஒடிசா மாநிலம் கங்காபூரை சேர்ந்த அலேகா நாயக் (வயது 25) என்பதும், அவர் 5 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.