ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்த 2 பெண்கள் கைது
பொங்கலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.
பொங்கலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரியல் எஸ்டேட் அதிபர்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்துக்்கு கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) வந்தார்.
அவர் தனக்கு ரூ.10 லட்சம் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஏற்பாடு செய்வதாக சந்திரன் கூறினார். இந்தநிலையில் சம்பவத்தன்று சந்திரனை வீட்டுக்கு வரும்படி கலாராணி அழைத்தார். அதன்படி சந்திரன் கலாராணி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கே மேலும் 4 பேர் இருந்தனர்.
நகை, பணம் பறிப்பு
அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கூகுள் பே மூலம் மாற்றிக்கொண்டனர்.
மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடம் இருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
2 பெண்கள் கைது
இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் அய்யப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெருந்தொழுவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.