தேடப்படும் குற்றவாளிகள் 9 பேர் கைது
தேடப்படும் குற்றவாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்ற வழக்குகளில் கைதாகி வெளியில் வந்தோ, போலீசாரின் பிடியில் சிக்காமலோ சிலர் வெளிநாடு தப்பி சென்று விடுவது வழக்கம். இவ்வாறு வெளிநாடு தப்பி சென்றவர்களை பிடிக்க போலீசார் சார்பில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நபர் குறித்த விவரங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும். அந்த நபர்களின் பட்டியல் விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதுதவிர அவர்கள் தப்பி சென்ற நாடுகளின் விவரங்கள் தெரிந்தால் அந்த நாட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்படும். அந்த நபர்கள் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும்போது விமான நிலையத்திலேயே கைது செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு தப்பி சென்ற குற்றவாளிகள் ஏராளமானோர் பிடிபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை குற்ற செயல்களில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி சென்ற 146 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 9 பேர் விமான நிலையங்களில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தேடப்படும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.