உத்தனப்பள்ளி அருகேபெண்ணை தாக்கிய 2 பேர் கைது
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெரிய பேட்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவருக்கும் வழித்தட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனின் நிலத்தின் வழியாக ராஜேஸ்வரி சென்றார். இதனால் அவரிடம் தகராறு செய்த மணிகண்டன் ஆத்திரமடைந்து தனது உறவினரான சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (49) என்பவருடன் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவரது நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளியான பெரிய பேட்டகானப்பள்ளியை சேர்ந்த மல்லேஷ் (31) ஆகியோரை கற்களால் தாக்கினர். இதில் காயமடைந்த ராஜேஸ்வரி மற்றும் மல்லேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், முனிராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.