தாளவாடி அருகே கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது


தாளவாடி அருகே கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது
x

தாளவாடி அருகே கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அடுத்த ஓங்கன்புரம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்றபோது உள்ளே வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் சம்பவம் நடந்த அன்று பீம்ராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இதுமட்டுமின்றி தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்து 580 மதிப்புள்ள மதுபாட்டில்களையும் யாரோ அள்ளிச்சென்று இருந்தனர்.

இந்த சம்பவங்கள் பற்றி தகவல் அறிந்ததும் தாளவாடி போலீசார் சத்தியமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால் தலைமையில் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த 3 சம்பவங்களும் ஒரே நாள் இரவில் நடந்து இருந்ததால் ஒரு கும்பல்தான் 3 இடங்களிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது தாளவாடி அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா (வயது 26), பாபு (37), சக்திவேல் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.12 ஆயிரத்து 305 ரூபாய், 4 கிராம் தங்கம் மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story