ரூ.4 கோடி மோசடி செய்த கொல்கத்தா வர்த்தகர் கைது


ரூ.4 கோடி மோசடி செய்த கொல்கத்தா வர்த்தகர் கைது
x

திருப்பூர் பனியன் உற்பத்தியாளரிடம், போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ ஆடைகளை அனுப்பி வைத்து ரூ.4 கோடியே 10 லட்சத்தை மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த வர்த்தகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் பனியன் உற்பத்தியாளரிடம், போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ ஆடைகளை அனுப்பி வைத்து ரூ.4 கோடியே 10 லட்சத்தை மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த வர்த்தகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.4 கோடியே 10 லட்சம் மோசடி

திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபுதரன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (வயது 36) என்பவர் மூலமாக அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4 கோடியே 10 லட்சத்தை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்ததாக தெரிகிறது.

போலி சான்றிதழ் தயாரிப்பு

இந்தநிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிேனகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உள்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகாஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story