ஈரோட்டுக்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறிப்பு; புரோக்கர் உள்பட 4 பேர் கைது


ஈரோட்டுக்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறிப்பு; புரோக்கர் உள்பட 4 பேர் கைது
x

ஈரோட்டுக்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறித்த புரோக்கர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோட்டுக்கு வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளியை கடத்தி பணம் பறித்த புரோக்கர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தல்

அசாம் மாநிலம் லாக்கென்பூர் மாவட்டம் போட்பில் பகுதியை சேர்ந்தவர் டிப்புல் (வயது 31). தொழிலாளியான இவர் வேலை தேடி ஈரோட்டுக்கு வந்தார். வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கும் புரோக்கராக செயல்படும் பீகார் மாநிலம் முகால் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கனூர்சானியின் மகன் விஷால்குமார் (25) என்பவர் டிப்புலை அழைத்து ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம்நகருக்கு அழைத்து சென்றார்.

அங்கு விஷால்குமார் மேலும் 3 பேருடன் சேர்ந்து டிப்புலை கடத்தி சென்று ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தார். அதன்பிறகு டிப்பிலின் தம்பியான கேரள மாநிலம் திருச்சூரில் வேலை செய்து வரும் சுனைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அந்த கும்பல் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியது. அதற்கு சுனை தற்போது தன்னிடம் ரூ.10 ஆயிரம் மட்டும் இருப்பதாகவும், மீதமுள்ள தொகையை நேரில் கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறினார். இதையடுத்து கடத்தல் கும்பலின் ஒருவரது வங்கி கணக்கிற்கு சுனை ரூ.10 ஆயிரத்தை அனுப்பி வைத்து உள்ளார்.

4 பேர் கைது

இந்த நிலையில் நேற்று ஈரோட்டுக்கு வந்த சுனை கடத்தல் கும்பல் தெரிவித்த இடத்துக்கு சென்றார். அங்கு டிப்புலின் கழுத்தில் அவர்கள் கத்தியை வைத்து மீதமுள்ள பணத்தை தருமாறு மிரட்டினர். ஆனால், சுனை தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அந்த கும்பல் டிப்புலிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து சுனை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம்நகர் 5-வது வீதியை சேர்ந்த லிங்கேஷ் (48), மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சந்திரமோகனின் மகன் செல்வராஜ் என்ற சந்தோஷ் (24), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்த சந்திரமோகன் (48) ஆகியோர் விஷால்குமாருடன் சேர்ந்து டிப்புலை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விஷால்குமார், லிங்கேஷ், சந்தோஷ், சந்திரமோகன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரமும், ஒரு செல்போனும் மீட்கப்பட்டது.

ஈரோட்டில் வேலை தேடி வந்த வடமாநிலத்தவரை கடத்தி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story