ஈரோட்டில் போதை மாத்திரை விற்பனை: சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது
ஈரோட்டில் போதை மாத்திரை விற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
ஈரோட்டில் போதை மாத்திரை விற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா்.
மடக்கி பிடித்து விசாரணை
ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா உத்தரவின்பேரின் போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், ரேணுகா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு 2 இளம்பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றது. அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போதை மாத்திரை விற்பனை
விசாரணையில் அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் கருப்பணன் வீதியை சேர்ந்த முருகனின் மகன் சுதர்சன் (வயது 21), பெரியசேமூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் விக்னேஷ் (26), சூளை ஈ.பி.பி.நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (24), சூளை எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கந்தசாமியின் மகன் இளங்கோ (25), கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த ராஜூவின் மகன் பசுபதி (23), நசியனூர்ரோடு வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தா சாலையை சேர்ந்த லியாகத்அலியின் மகள் சமீம்பானு (20), பிரீத்தி என்கிற இந்திராணி (22) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதில் பிடிபட்ட விக்னேஷின் தந்தை முருகானந்தம் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கைது
இதைத்தொடர்ந்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்றதாக 2 இளம்பெண்கள் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 86 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா, விலை உயர்ந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் 2 இளம்பெண்கள், 5 இளைஞர்கள் போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7-ந் தேதி ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் போதை ஊசி விற்றதாக 2 வாலிபர்களை டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை ஊசி விற்ற தொகை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.