அம்மாபேட்டை அருகே வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது


அம்மாபேட்டை அருகே வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது
x

அம்மாபேட்டை அருகே வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவர் தனது வீட்டு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக மின்சார மோட்டார் பொருத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் சொந்த வேலையாக சென்னை சென்று விட்டார். அதன்பின்னர் கடந்த 15-ந் தேதி வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என செந்தில்குமாருக்கு அவருடைய மனைவி போன் செய்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக செந்தில்குமார் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் மின் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார். இதுபற்றி அறிந்த செந்தில்குமார் அம்மாபேட்டை வந்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்மோட்டாரை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெரிஞ்சிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை விசாரித்தபோது அவர் நெரிஞ்சிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (27) என்பதும், அவர் தான் செந்தில்குமாரின் வீட்டில் மின்மோட்டார் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் ரஞ்சித் குமார் (23), பூனாச்சி அருகே உள்ள முகாசிபுதூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மகன் மனோஜ் (21) ஆகியோரும் மின்மோட்டார் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன், ரஞ்சித்குமார், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story