ஓசூர் வழியாக திருப்பூருக்கு அரசு பஸ்சில் 15 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது


ஓசூர் வழியாக திருப்பூருக்கு அரசு பஸ்சில் 15 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 7:38 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் ஓசூர் வழியாக திருப்பூருக்கு கஞ்சா கடத்தி சென்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் ஓசூர் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பஸ்சில் இரு வாலிபர்கள் 3 பைகளுடன் இருந்ததை கண்டு போலீசார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் போலீசார் அந்த பைகளில் சோதனையிட்டனர். அதில் 3 பைகளில் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

மேலும் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக திருப்பூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஒடிசா மாநிலம் பவுத் சேகாமல் பகுதியை சேர்ந்த பிரகிஷோர் பாலியா (வயது 26), டூடாம் பாக்கார் (21) ஆகிய இருவரை கைது செய்ததுடன், 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் திருப்பூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பிடிபட்ட 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்கள் மற்றும் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்கள் இருவரையும் சிப்காட் போலீசார் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story