பஸ் டிரைவரை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி அதிரடி கைது
நாமகிரிப்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பஸ் டிரைவரை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராசிபுரம்
பஸ் டிரைவர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30) இவர்களுக்கு ஜன ஸ்ரீ (13) கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் மோகன்ராஜ் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜின் உடலை கைப்பற்றி, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் போலீசார் அவரது மனைவி கீர்த்தனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாதது போல் அவர் நாடகமாடினார்.
இந்த நிலையில் கீர்த்தனா மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஆயில்பட்டி போலீசார் கீர்த்தனாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது வரகூர் கோம்பையைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும், கீர்த்தனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையொட்டி கதிரேசன் மற்றும் கீர்த்தனாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பரபரப்பு வாக்குமூலம்
வரகூர் கோம்பையைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் கதிரேசனுக்கும், கீர்த்தனாவுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மோகன்ராஜ் மனைவி கீர்த்தனாவை கண்டித்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று கீர்த்தனா குழம்பில் தூக்க மாத்திரைகளை போட்டு உள்ளார். இரவு மோகன்ராஜ் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து தூங்கிக்
கொண்டிருந்த மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தனர். இதையடுத்து தனது கணவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாதது போல் கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம் சிறையில் அடைப்பு
இதையடுத்து போலீசார் மர்மசாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி கீர்த்தனா மற்றும் கதிரேசனை கைது செய்தனர். பின்னர் இருவருக்கும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரையும் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.