வெப்படையில் மளிகை கடைக்காரரிடம் பணம் பறிக்க முயன்ற `டிப்டாப்' வாலிபர் கைது
வெப்படையில் மளிகை கடைக்காரரிடம் பணம் பறிக்க முயன்ற `டிப்டாப்' வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் ஜெகதீஷ் (வயது 40). இவருடைய கடைக்கு நேற்று மதியம் `டிப்டாப்' உடை அணிந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அந்த வாலிபர் தான் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை இருக்கின்றதா? என சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது அவர் ஜெகதீசை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் சந்தேகமடைந்த ஜெகதீஷ் உடனடியாக வெப்படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் அந்த கடைக்கு விரைந்து சென்று `டிப்டாப்' வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் ஈரோட்டை சேர்ந்த நவீன்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் இவர் `டிப்டாப்' உடை அணிந்து மளிைக கடைகளுக்கு சென்று புகையிலை தடுப்பு அதிகாரி என்று கூறி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர்.