தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 11 பேர் மீது குண்டர்தடுப்பு சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 11 பேர் மீது குண்டர்தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் கொலை, கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொலை வழக்கு
கயத்தார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் சுரேஷ் (வயது 20) என்பவரை வீட்டுக்குள் புகுந்து கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில், நெல்லை மாவட்டம் சாந்திநகர் மெயின்ரோட்டை சேர்ந்த சுடலைமுத்து மகன் பரமசிவன் என்ற பந்தல்ராஜா (34), கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அஜித்கண்ணன் என்ற கண்ணன் (27), கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் வெயிலுமுத்து (44), இசக்கி என்ற முருகன் மகன் ஜெயமணிகண்டன் என்ற ஜெயமணி (21), மாரியப்பன் மகன் மாரியப்பன் (19), பாளையங்கோட்டை கணம் பிள்ளை நயினார் தெருவைச் சேரந்த பரமசிவன் மகன் இசக்கிராஜா (27), பாளையங்கோட்டை காமராஜ் தெருவைச் சேர்ந்த ஜெபசிங் ஆசீர் மகன் கிறிஸ்டோபர் மார்ட்டின் ராஜ் என்ற மார்ட்டின் (21) ஆகிய 7 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா
இதே போன்று தூத்துக்குடி திரு.வி.க.நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்ததாக தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (22), தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த நாகசுந்தர் மகன் பிரதீப்குமார் (22), தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் அமிர்தலிங்கம் என்ற லிங்கம் (64) ஆகிய 3 பேரை தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ஆவுடையார்புரத்தை சேர்ந்த சந்தனம் மகன் சந்தனராஜ் (22) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இதைத் தொடர்ந்து 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்பரமசிவன் என்ற பந்தல்ராஜா, அஜித்கண்ணன் என்ற கண்ணன், வெயிலுமுத்து, ஜெயமணிகண்டன் என்ற ஜெயமணி, மாரியப்பன், இசக்கிராஜா, கிறிஸ்டோபர் மார்ட்டின் ராஜ் என்ற மார்ட்டின், ராம்குமார், பிரதீப்குமார், அமிர்தலிங்கம் என்ற லிங்கம், சந்தனராஜ் ஆகிய 11 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். ஒரே நாளில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 249 பேர்...
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உள்பட 249 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.