வாலிபர் கைது; ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்
திருவாரூர் அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் நீடாமங்கலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரடாச்சேரி:
திருவாரூர் அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் நீடாமங்கலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெட்டிக்கொலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் ராஜ்குமாரை(வயது34)(வளரும் தமிழகம் கட்சி பிரமுகர்) நேற்று முன்தினம் 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் முதற்கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் பாரதி, வீரபாண்டி, சூர்யா, மாதவன், அரசு ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
தேடுதல் வேட்டை
இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரவீன்(22) நேற்றுமுன்தினம் இரவு தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம், மனோரா அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். .
துப்பாக்கியால் சுட்டார்
பிரவீன் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றமுயன்றனர். அப்போது பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டிவிட்டு விட்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் பிரவீனை பிடிக்க முயன்ற போது அவரை பிரவீன் மீண்டும் வெட்ட முயற்சித்தார். அப்போது தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ரா ஜே ஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீனை நோக்கி சுட்டார்.
இதில் பிரவீனின் வலது காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். பின்னர் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். பிரவீன் மீது ஏற்கனவே திருவாரூர் நகரக போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி வழக்கு மற்றும் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
6 பேர் சிறையில் அடைப்பு
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக நீடாமங்கலத்தை சேர்ந்த பார்த்திபன் (22) என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பிரவீனையும் போலீசார் கைது செய்தனர். பிரவீன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை தவிர கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருவாரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி ஜிந்தா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் 6 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் 6 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரையும் போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பு பணி
பிரேத பரிசோதனை முடிந்து ராஜ்குமார் உடலை நேற்று முன்தினம் பூவனூருக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிலர் நீடாமங்கலத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
நீடாமங்கலத்தில் ரகளையில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பூவனூர், ஒளிமதி, நீடாமங்கலம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து 3-வது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.