கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
வருசநாடு அருகே கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே வாலிப்பாறை பகுதியில் இருந்து கருங்காலி மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு வனத்துறையினர் தும்மக்குண்டு அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாலிப்பாறையில் இருந்து வருசநாடு நோக்கி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் சாக்குப்பை ஒன்றை எடுத்து வந்தார்.
இதனால் அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த சாக்குப்பையில் 2 கருங்காலி மரக்கட்டைகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட நபரை வனத்துறையினர் கைது செய்து, வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கருங்காலி மரக்கட்டை கடத்தியதில் தும்மக்குண்டு பகுதியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.