விவசாயியின் கார்ஷெட்டிற்கு தீ வைத்த 2 பேர் கைது
விவசாயியின் கார்ஷெட்டிற்கு தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பெரியதத்தூர் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(வயது 47). விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் உள்ள கார்ஷெட்டில் கடந்த 9-ந் தேதி கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. இதனை அவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர் அதிகாலை வேலைக்கு வந்தபோது ஹரிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் உள்ள கார்ஷெட்டில் நின்ற கார் தீப்பற்றி எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தூங்கிக்கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை எழுப்பி தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது, கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், 2 இருசக்கர வாகனம், 4 சைக்கிள்கள், 20 உரமூட்டைகள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயி கிடந்தன. இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின்பேரில் அய்யப்பன்நாயக்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கவியரசன்(24) என்பவரை பிடித்து விசாரித்ததில் கவியரசனும், பெரியதத்தூர் கிராமத்தைச் சார்ந்த கலியபெருமாள் மகன் வைரமுத்து (29) ஆகிய இருவரும் சேர்ந்து கார்ஷெட்டில் தீ வைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கவியரசன், வைரமுத்து மற்றும் சவுதி அரேபியாவில் வசித்து வரும் பெரியதத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் எழில்செல்வன் (25) ஆகிய மூவரும் ஹரிகிருஷ்ணனிடம் கடன் வாங்கி உள்ளனர். அதனை அவர் திரும்பக் கேட்டபோது பணத்தை திருப்பித் தரவில்லை. தொடர்ந்து கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்து கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், சவுதியில் இருக்கும் எழில்செல்வன் தான் தீ வைக்க சொன்னதாகவும் விசாரணையில் கவியரசனும், வைரமுத்துவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கவியரசன், வைரமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தில் சவுதியில் உள்ள எழில்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.