விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது
காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெண்டிக்கானஅள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 65). விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னா் அவர் வீடு திரும்பி வந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த திருப்பதி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையை அந்த நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருப்பதி அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்ம நபரை விரட்டி பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நாயக்கனஅள்ளியை சேர்ந்த குமார் (53) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.