பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேர் கைது


பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேர் கைது
x

தளி அருகே ஊராட்சி தலைவர் கொலையில் பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே ஊராட்சி தலைவர் கொலையில் பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஊராட்சி தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 46). இந்திய கம்யூனிஸ்டு கட்சி தளி பகுதி உறுப்பினர். இவர் தாரவேந்திரம் ஊராட்சி தலைவராக இருந்தார். கடந்த 2-ந் தேதி இரவு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தளி கொத்தனூரில் இருந்து பி.பி. பாளையம் சாலையில் சென்ற போது அவரை வழிமறித்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலை தொடர்பாக கடந்த 3-ந் தேதி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் பி.பி.பாளையத்தை சேர்ந்த தாரவேந்திரம் ஊராட்சி துணைத்தலைவி சாக்கம்மாவின் மகன் ரவி என்ற திம்மையா (38), பெரிய மல்லசோனையை சேர்ந்த சிவமல்லையா என்கிற கரியன் (27) ஆகிய 2 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் தளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தளி அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

11 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக ரவியின் தம்பிகளான கிருஷ்ணா (36), சங்கரப்பா என்ற சங்கர் (30), மாதேஷ் (29), தாரவேந்திரம் ஊராட்சி செயலாளர் பிரசன்னா (48), பெரிய மல்லசோனை புட்டமாரி (31), தளி கொத்தனூரை சேர்ந்த மல்லேஷ் (25), பி.பி.பாளையம் தியாகு என்கிற தியாகராஜ் (22), கக்கதாசம் ராகேஷ் (21) முனிராஜ் (25) ஆகிய 9 பேர் என மொத்தம் 11 பேரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் மீது கொலை வழக்கு, எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலை குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

பணத்தகராறில் கொலை

ரவி குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தி தரகராக செயல்பட்டு தனியார் நிறுவனத்திற்கு விற்று கொடுத்தார். இந்த பணத்தை ரவி குடும்பத்திற்கு சரியாக கொடுக்கவில்லை. பணம் கிடைக்காமல் தவித்து வந்த ரவியின் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்தார்.

பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த ரவி மற்றும் அவரது தம்பிகள் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை கொலை செய்தனர்.

இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story