ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது


ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது
x

ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

ஆத்தூர் அணைப்பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் கடமான் வேட்டையில் ஈடுபடுவதாக சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைரோடு பிரிவு வனப்பணியாளர்களை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட சிறுமலை வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, கொடைரோடு பிரிவு வனப்பணியாளர்கள் அம்பாத்துரையை அடுத்த செட்டியபட்டி பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் வெள்ளோடு பகுதியை சேர்ந்த சக்கரியாஸ் (வயது 46), பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த இருளப்பன் (32) என்பது தெரியவந்தது.

பின்னர் மோட்டார் சைக்கிளில் தொங்கவிடப்பட்டிருந்த பையை வனப்பணியாளர்கள் சோதனையிட்டனர். அதில் 7 கிலோ கடமான் இறைச்சியும், துண்டிக்கப்பட்ட கடமான் தலையும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது ஆத்தூர் காமராஜர் அணை அருகில் உள்ள வனப்பகுதியில் கடமானை வேட்டையாடி கொன்றதும், அதன் இறைச்சியை செட்டியபட்டியை சேர்ந்த ஒருவருக்கு விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடமானை வேட்டையாடுவதற்காக அவர்கள் துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதும் வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.



Next Story