ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கர்நாடகாவை சேர்ந்தவர் கைது
கொடைரோட்டில் ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கர்நாடகாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து திண்டுக்கல், கொடைரோடு வழியாக தூத்துக்குடிக்கு ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் இன்று ரெயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதன்படி, மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். பொது பெட்டியில் இருந்த கர்நாடக மாநிலம் பி.ஆர்.காவல் கணக்கோடு பகுதியை சேர்ந்த சஞ்சு (வயது 41) என்பவர் வைத்திருந்த உடைமையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.