லாரி டயர்களை திருடியவர் கைது
தர்மபுரி அருகே லாரி டயர்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி-ஜிட்டாண்டஅள்ளி இடையே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்தபணியில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தை சேர்ந்த அலுவலகம் புலிக்கரை பகுதியில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள இடத்தில் டிப்பர் லாரிகளுக்கு பயன்படுத்தும் 16 டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த டயர்களை கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகம் சார்பில் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த பழனி (வயது 40) என்பவர் டயர்களை திருடியது தெரியவந்தது. இந்த நிலையில் பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த திருட்டில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.