விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் கைது
சூளகிரி அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
சூளகிரி:
சூளகிரி அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கஞ்சா செடி
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மது கடத்தப்படுவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல கஞ்சா, குட்கா கடத்தல், விற்பனையை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சூளகிரி அருகேயுள்ள சுண்டட்டி கிராமத்தில் விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் சுண்டட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது வெங்கட்ராஜ் மனைவி யசோதா (வயது42) என்பவர் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருந்தது தெரியவந்தது.
பெண் கைது
இதுதொடர்பாக யாசோதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விளை நிலத்தில் பயிரிட்டு இருந்த 3 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 கிராமங்களில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கிராமங்களில் சோதனை நடத்தப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தெரிவித்தார்.