சின்னமனூரில் மருமகனை கத்தியால் குத்திய டிரைவர் கைது


சின்னமனூரில் மருமகனை கத்தியால் குத்திய டிரைவர் கைது
x

சின்னமனூரில் மருமகனை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் துரைபாண்டி (வயது 28). அவருடைய மனைவி மோனிகா (22). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். துரைபாண்டி, சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் உள்ள கோழிப்பண்ணையில், குடும்பத்துடன் தங்கு வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மோனிகா கோபித்துக்கொண்டு மகன்களுடன், சின்னமனூர் காந்திநகர் காலனியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் துரைபாண்டி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு துரைபாண்டி வந்தார். அங்கு மனைவியை சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது துரைபாண்டிக்கும், மாமனார் லாரி டிரைவரான ஜெயவெற்றிக்குமாருக்கும் (50) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயவெற்றிக்குமார், தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து துரைபாண்டியை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயவெற்றிக்குமாரை கைது செய்தனர்.


Next Story