பஸ்சில் குட்கா கடத்திய 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கஞ்சா விற்ற 4 பேர் சிக்கினர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கஞ்சா விற்பவர்கள் மற்றும் குட்கா கடத்துபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஓசூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் குட்கா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது
அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டி (வயது23) ஜெகன் (41) ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து பஸ் மூலம் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக கிருஷ்ணகிரி துவாரகாபுரி ஸ்ரீகாந்த் (23), திருவள்ளுவர் நகர் லோகேஷ் (27), பர்கூர் வரமலைகுண்டா பப்போடா (48), தளி பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற பெங்களூரு முனீஸ்வர் நகர் ஷேக் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.