போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி; 3 பேர் கைது
பழனியில், காரை வழிமறித்து போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் பாலா (வயது 34). கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ்நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி கல்பனா (28). நேற்று இரவு பாலா, தனது மனைவியுடன் காரில் உடுமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பழனி காமராஜர்நகர் பகுதியில் அவர்கள் வந்தபோது, சாலையின் நடுவே நின்ற 3 பேர் திடீரென்று காரை மறித்தனர். இதனால் காரை நிறுத்திவிட்டு பாலா, கல்பனா இறங்கி வந்தனர். அப்போது, காரை வழிமறித்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கல்பனாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் கல்பனா திருடன்...திருடன்... என கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதற்கிடையே அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில், பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நகை பறிக்க முயன்ற நபர்கள் பழனி காமராஜர்நகரை சேர்ந்த கார்த்தி (22), சாலமோன்ராஜா (21), மாரிமுத்து (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.