17 வயது மாணவர் கைது
பர்கூர் அருகே பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவத்தில் 17 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கப்பல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கோபிநாத் (வயது 17) அறிவியல் பாட பிரிவில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவர் கோபிநாத் வெளியே வந்தார். அப்போது மற்றொரு மாணவருக்கும், இவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் அந்த மாணவர் தள்ளி விட்டதில் மாணவர் கோபிநாத்திற்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவரை மீட்டு பர்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவன் கோபிநாத் இறந்து விட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கோபிநாத்்துடன் படித்த 17 வயதுடைய மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.