தம்பி உள்பட 2 பேர் கைது


தம்பி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் வேன் டிரைவர் கொலையில் அவரது தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மகன் கொலையான அதிர்ச்சியில் அவரது தந்தையும் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

வேன் டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் அன்னையப்பா. இவரது மகன் சென்னப்பா என்கிற சேகர் (வயது 37). வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அன்னையப்பாவும், கிருஷ்ணப்பாவும் அண்ணன்-தம்பி ஆவார்கள். சென்னப்பாவும், முனிராஜூம் பெரியப்பா-சித்தப்பா மகன் வழி முறையில் அண்ணன்-தம்பி ஆவர். இவர்கள் அருகருகில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவிற்கும், சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் சென்னப்பா தனது தம்பி மனைவி மதுவை கண்டித்தார். இது குறித்து மது தனது கணவர் முனிராஜூக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

குத்திக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், பக்கத்து வீட்டில் வசிக்கும் பசவராஜ் என்பவரின் மகன் ரேணுகா ஆரத்யா (20), பேகேப்பள்ளி சக்தி (22) ஆகியோர் அங்கு வந்து சென்னப்பாவுடன் தகராறு செய்தனர். அவர்களுக்குள் தகராறு முற்றியதில் சென்னப்பாவை அவர்கள் கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வேன் டிரைவர் கொலை தொடர்பாக முனிராஜ், ரேணுகா ஆரத்யா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சக்தியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் தந்தை பலி

இதனிடையே கொலை செய்யப்பட்ட சென்னப்பாவின் உடல் ஓசூர் தனியார் மருத்துவமனையில் இருந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், சென்னப்பாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பேகேப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு சென்னப்பாவின் உடல் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் படுத்திருந்த சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவை உறவினர்கள் எழுப்ப முயன்றனர். அப்போது மகன் இறந்த தகவல் அறிந்ததும் அவர் இறந்து விட்டார். மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் அன்னையப்பா இறந்தது தெரியவந்தது.

சோகம்

இதை கண்டு உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தந்தை-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து தந்தை - மகன் ஆகிய 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் ஓசூர் பேகேப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story