தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x

சேலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம்

சேலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நல்லியாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 35). டாஸ்மாக் குடோனில் பெட்டி தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (22). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவருடைய பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பனமரத்துப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

கணவர் கைது

இந்த புகாரின்பேரில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் திருமணமான 4 ஆண்டுக்குள் பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினியும், துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகியும் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் 2 மாதங்களுக்கு பிறகு பிரியாவின் தற்கொலைக்கு காரணம் அவருடைய கணவர் ஆறுமுகம் தான் என போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கள்ளத்தொடர்பு

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆறுமுகத்துக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் அந்த பெண்ணுடன் தவறான உறவு கொண்டிருப்பதை அறிந்து பிரியா தட்டி கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட சண்டையில் பிரியாவிடம் ஆறுமுகம் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் கணவன் தவறான உறவு வைத்திருப்பதை எண்ணி வேதனை அடைந்த பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 மாதத்திற்கு பின்பு தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பனமரத்துப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story