பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி, ராமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமராஜபுரம் பஸ் நிறுத்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது முதுகு பகுதியில் பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் நாகராஜன் (வயது 23) என்பதும், இவர் மீது சிவகங்கை பகுதியில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.
பின்னர் அவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நாகராஜனை 15 நாள் சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி, அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.