ரவுடி கொலையில் 2 பேர் கைது
சேலத்தில் பிரபல ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் கொன்றது அம்பலமாகி உள்ளது.
சேலத்தில் பிரபல ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் கொன்றது அம்பலமாகி உள்ளது.
ரவுடி
சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
பிரபல ரவுடியான இவர் அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அன்னதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலரை தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதால் அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநாயக்கன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 3-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடிநீர் குழாய் அருகே ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
முற்றுகை போராட்டம்
இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, 'ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்காதலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமாருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலையாளிகள் தற்போது திருச்செங்கோட்டில் உள்ளனர். அவர்களை கைது செய்ததால் தான் உடலை பெற்றுக்கொள்வோம்' என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
2 பேர் கைது
இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (27), சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டது அம்பலமாகி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இருப்பினும் கைது செய்யப்பட்டு உள்ள 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்களையும் கைது செய்தால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.