ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேலத்தில் நடந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் நடந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி கொலை
சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் உடையாப்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டது. 7 பேர் கொண்ட கும்பல் கொலையை திட்டம் தீட்டி செய்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும் ரவுடி ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினரான ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட ரவுடி, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவுடியை கொலை செய்ய வாலிபர் முடிவு செய்து தனது நண்பர்களை வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் ஒருவர் கைது
இதுதொடர்பாக தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி, குகையை சேர்ந்த பிரியாணி மணி ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய தாதகாப்பட்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய அஸ்தம்பட்டியை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் (30) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ரஞ்சித்குமார் மனைவியின் கள்ளக்காதலனை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.