கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 4 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதன்படி பர்கூர் போலீசார் தப்ளமேடு-மத்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த திருப்பதி (வயது37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல சூளகிரி போலீசார் எலசமாக்கனப்பள்ளி பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த ரஞ்சித் (46) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனை
காவேரிப்பட்டணம் போலீசார் பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த அண்ணாமலை (43) என்பவரை கைது செய்தனர். பேரிகை போலீசார் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக பேரிகை மாருதி நகரை சேர்ந்த விஜயகுமார் (20) என்பரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா, லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.