பாரூர் அருகே இரட்டை கொலை வழக்கில் ஒப்பந்ததாரர் கைது மது அருந்தி விட்டு பணி செய்யாததால் கொன்றதாக வாக்குமூலம்


பாரூர் அருகே இரட்டை கொலை வழக்கில் ஒப்பந்ததாரர் கைது மது அருந்தி விட்டு பணி செய்யாததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 July 2023 1:15 AM IST (Updated: 1 July 2023 8:29 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

பாரூர் அருகே கோவில் திருப்பணிகள் செய்ய வந்த தொழிலாளர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தி விட்டு பணி செய்யாததால் ஆத்திரத்தில் கொன்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவில் திருப்பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று புனரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக இந்த பணிகள் நடந்து வருகிறது. தற்போது சிலைகள் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வயலூரை சேர்ந்த சபரிவாசன் (வயது 58), பிச்சாவரம் மேல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (37), சிதம்பரம் கணேசன் (52), கடலூர் வன்னியபுரம் சதீஷ்குமார் (30) ஆகியோர் கோவில் வளாகத்தில் தங்கி சிலைகளை வடிவமைத்து வந்தனர். கடந்த 28-ந் தேதி காலை சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

கைது-விசாரணை

இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களுடன் பணியாற்றி வந்த கணேசன், சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் கணேசன் தான் 2 பேரையும் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான கணேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் ஒப்பந்ததாரராக இருக்கிறேன். நான் தான் சபரிவாசன், ராஜ்குமார் 2 பேரையும் சிலை வடிவமைக்கும் பணியில் சேர்த்து விட்டேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தோம். அப்போது ராஜ்குமார், சபரிவாசன் ஆகிய 2 பேரிடமும் வேலை செய்வதற்கு பணம் கொடுத்து வேலையை செய்யும்படி கூறினேன். ஆனால் அவர்கள் 2 பேரும் வேலை செய்யாமல் அந்த பணத்தில் மது குடித்து விட்டு இருந்தனர்.

ஆத்திரத்தில் கொன்றேன்

கோவிலில் பணிகள் நடைபெறாமல் இருந்ததால் கிராம மக்கள் என்னிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். குறித்த நேரத்திற்குள் கோவில் பணிகளை முடித்து கொடுக்க தான் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். இப்படி செய்தால் எப்படி என என்னிடம் கிராமமக்கள் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான், கடந்த 28-ந் தேதி கோவிலுக்கு வந்தேன்.

அப்போது கோவில் வளாகத்தில் ராஜ்குமார், சபரிவாசன் 2 பேரும் மது போதையில் படுத்து இருந்தனர். அவர்களை நான் எழுப்பினேன். அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் இருந்த சமையல் கரண்டியால் 2 பேரையும் சரமாரியாக தாக்கினேன். இதில் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கணேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story